இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்களும் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.30 முதல் மாலை 4.30 மணி வரையில் நாள் முழுவதும், பல்வேறு காரணங்களுக்காக தடைப்பட்டிருந்த வாய்மூல பதில்களை எதிர்ப்பார்த்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள 50 வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 7ஆம் திகதி தவிர்ந்த நாளை முதல் 6 ஆம் திகதி வரையில், முற்பகல் 9.30 முதல் 10.30 வரையில் வாய்மூல வினாக்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை முதல் அரசாங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை அரை மணித்தியாலம் நீடிக்கவும், சுயாதீன உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க அந்த நேரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாலை 4.30க்கு முடிவடையவுள்ள அரசாங்க விவகாரங்கள் மீதான விவாதத்திற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 வரையான எஞ்சிய 30 நிமிடங்களில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பரிசீலிப்பதற்காக நீதித்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.
இந்த சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





