கொழும்பு, ஓக.04
01 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மதிய உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்காகக் கொண்டு பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
வறுமையை ஒழிக்கும் கொள்கையின் கீழ், ஊட்டச்சத்து குறித்து எழுப்பப்படும் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசு எதிர்பார்க்கிறது.
இதன்படி, மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறித்த மாவட்ட அளவிலான தரவுகளின் அடிப்படையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மதிய உணவு திட்டத்திற்கு கூடுதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.