ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி, பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படாமை தொடர்பில் சுயாதீன உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
“தயாசிறி ஜயசேகர சிரேஷ்ட உறுப்பினராக, படித்தவராக இருந்தாலும், அவர் முட்டாள் போல் செயற்படுகிறார்” என சுயாதீன உறுப்பினர் நிமல் லன்ஷா கடுமையாக சாடினார்.
“முட்டாள்’ என்ற சொற்பதத்தை ஹன்சாட்டில் இருந்து மாத்திரம் நீக்காமல், அந்த சொல்லை உச்சரித்தவரையும் சபையில் இருந்து வெளியேற்றுங்கள்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
“யார் முட்டாள்? யார் அறிவாளி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எதிர்த்தரப்பில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் கைகூலியாக நாங்கள் செயற்படவில்லை” என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஒக் 4) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது கோப் குழுவுக்கு சுயாதீன தரப்பினரின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து சுயாதீன தரப்பினர் அதிருப்தி வெளியிட்டனர்.
விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, அரசாங்கத்தில் இருந்து விலகி, பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு நியமிக்கப்படவில்லை. கோபா குழுவுக்கு சுயாதீன உறுப்பினர் சரித ஹேரத்தின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரை செய்தமை வரவேற்கத்தக்கது.
பாராளுமன்றில் எமது உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதை பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த அரசாங்கம் இன்னும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கும் என்று குறிப்பிட முடியாது.
ஆகவே, மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் எமக்கான உரிமை எமக்கு வேண்டும். அத்துடன் எமது கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கூற்றுடன் ஒன்றுபடுகிறேன். சுயாதீன உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கோபா குழுவில் இருந்து திட்டமிட்ட வகையில் நீக்கப்பட்டுள்ளமை தெளிவாக வெளிப்படுகிறது.
ஏழு அறிவுடையவரின் உதவியாளர்கள் கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இருந்துகொண்டு ஏழு அறிவுடையவரின் கட்டளைக்கமைய செயற்படுவதையிட்டு வெட்கப்பட வேண்டும். ஆகவே தவறை திருத்திக்கொள்ளுங்கள் என சபாநாயகரை நோக்கி குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல கோப் குழு உறுப்பினர் நியமனத்தில் எவரது பெயரையும் நாங்கள் நீக்கவில்லை. தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யார் பெயர்களை நீக்கினார்கள் என்பதை வெளிப்படை தன்மையுடன் குறிப்பிடவில்லை.
அரசாங்கமே பெயர்களை நீக்கியது. ஏழு அறிவுடையவர் என்பவர் சபையில் இல்லை. ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் கோப் குழுவுக்கு சரித ஹேரத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளார் என்றார்.
இதன்போது மீண்டும் உரையாற்றிய விமல் வீரவன்ச நான் ஏழு அறிவுடையவர் என எதிர்தரப்பின் முதற்கோலாசானை குறிப்பிடவில்லை. ஆளும் தரப்பில் இருந்தவரையே குறிப்பிட்டேன் என்றார்.
இதன்போது டலஸ் அழகப்பெரும எழுந்து உரையாற்றுகையில், விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமது தனிப்பட்ட தேவைகளை குறிப்பிடவில்லை. கோப் மற்றும் கோபா ஆகிய முக்கிய குழு நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்துக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் முக்கிய தீர்மானங்களில் இறுதி தீர்மானத்தை எடுக்கும் உரிமை சபாநாயகருக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு மற்றும் நாட்டு மக்கள் மத்தியில் கோப் குழுவின் முன்னாள் உறுப்பினர் சரித ஹேரத்துக்கு அங்கீகாரம் உள்ளது. பல மோசடிகளை இவர் பகிரங்கப்படுத்தினார். அரசாங்கம் ஏன் இவ்வாறு செயற்படுகிறது என்பது கேள்விக்குறியானது.
அரசாங்கத்தின் செயற்பாடு வெட்கப்பட வேண்டியது. சபாநாயகர் பொறுப்புகளில் இருந்து விலகக்கூடாது. நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். 225 உறுப்பினர்களையும் வெறுக்கிறார்கள். இவ்வாறான குறுகிய வெட்கக்கேடான செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக சாடுகிறார்கள். மறுபுறம் சுயாதீன உறுப்பினர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து சபையை மலினப்படுத்த வேண்டாம் என்றார்.
இதன்போது உரையாற்றிய சபாநாயகர், கட்சித் தலைவர் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. சுயாதீன தரப்பினருக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மாத்திரம் தலையிட்டேன். கோப் மற்றும் கோபா குழு உறுப்பினர் நியமனம் தொடர்பான தீர்மானம் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்டதே தவிர, நான் தலையிடவில்லை என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய நிமல் லன்ஷா, பாராளுமன்ற நடவடிக்கை நிலையியல் கட்டளைக்கமைய இடம்பெற வேண்டும். ஆகவே ஒரு விடயத்தை பிடித்துக்கொண்டு வாத பிரதிவாதங்கள் தொடர்வதை விடுத்து, சபை நடவடிக்கை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என்றார்.
இதன்போது மீண்டும் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர, நான் நிமல் லன்ஷாவுடன் முரண்படவில்லை. அவரை ஆளும் தரப்பின் பிரதி கோலாசானான ஆளும் தரப்பு பக்கம் அழைத்துக்கொண்டால் சிறந்ததாக அமையும். நிலையியல் கட்டளையின் 114ஆவது பிரிவை தெளிவாக எடுத்துரைத்தேன். தெரிவுக்குழு நியமனத்தின் போது சுயாதீன உறுப்பினர்கள் எவரும் தொடர்புபடவில்லை. அதனையே திருத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.
இவ்விடயம் தொடர்பில் சபை முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் உரையாற்றினேன். பலரது பெயர் கோப் குழுவுக்குள் உள்வாங்கப்படவில்லை. எமக்கும் வாய்ப்பு தாருங்கள் என்றார்.
அவரை தொடர்ந்து மீண்டும் எழுந்து உரையாற்றிய விமல் வீரவன்ச, கட்சித் தலைவர் கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய கோப் குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் ஆலோசனை மாத்திரம் கோரப்பட்டுள்ளதே தவிர, எமது ஆலோசனை கோரப்படவில்லை. கோப் குழுவின் தலைவர் பதவியை ரஞ்சித் பண்டாரவுக்கு வழங்குமாறு ஏழு அறிவுடையவர் பரிந்துரைத்துள்ளார் என்றார்.
மீண்டும் நிமல் லன்ஷா தனது உரையினை தொடர்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையே குறிப்பிட்டேன். வேறொன்றும் குறிப்பிடவில்லை. நான் அவரை குறிப்பிட்டேன் என தயாசிறி ஜயசேகர தொப்பியை அவர் தலையில் எடுத்து அணிந்துகொண்டார்.
தயாசிறி ஜயசேகர சிரேஷ்ட உறுப்பினராக இருந்தாலும், படித்தவராக இருந்தாலும், ‘முட்டாள்’. பாராளுமன்ற முறைமை தெரியாமல் ‘முட்டாள்’ போல் பேசுகிறார் என கடுமையாக சாடினார்.
அப்போது ‘முட்டாள்’ என்ற பதத்தை நீக்குங்கள் என சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில் எழுந்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், அவர் உரையின்போது ‘முட்டாள்’ என்ற சொற்பதத்தை பாவித்தார். அதனை நீக்குவது மாத்திரமல்ல, அவரை சபையில் இருந்து வெளியேற்றுங்கள் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர, நாங்கள் எதிர்க்கட்சியாக செயற்படுகிறோம். ஆளும் தரப்பின் கைகூலியாக செயற்படவில்லை. எமது பிள்ளைகளை பிரதமர் அலுவலகத்தின் பணிக் குழுவினராக பதவிக்கு அமர்த்திக்கொண்டு செயற்படவில்லை. என்னை ‘முட்டாள்’ என்று சொன்னவருக்கு இதனை குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
முட்டாள் யார்? அறிவாளி யார்? என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக யார் செயற்படுகிறார்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள். ஆகவே, சபாநாயகர் அவர்களே, இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுங்கள் என்றார்.
பிற செய்திகள்