இந்தியாவுடனான இறுதி ரி-20 போட்டியில் தென்னாபிரிக்கா ஆறுதல் வெற்றி!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை வென்றிருந்தாலும், மூன்றாவது போட்டியின் வெற்றி தென்னாபிரிக்கா அணியை ஆறுதல் அடைய வைத்துள்ளது.

இந்தூர் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிலே ரொஸ்சவ் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தீபக் சஹார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 228 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் கார்த்திக் 46 ஓட்டங்களையும் தீபக் சஹார் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டுவைன் பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகளையும் வெய்ன் பார்னல், லுங்கி ங்கிடி மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரிலே ரொஸ்சவ் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக சூர்ய குமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply