தேசிய பேரவையிலிருந்து ஜீவனும் விலகல்!

தேசிய பேரவையிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.

அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் சபாநாயகர் கூறினார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். இந்தப் பிரேரணை எதிர்ப்பு இன்றி ஏகமனமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தத் தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

சகல நாடாளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் தேசிய பேரவையைக் கூட்டுவதற்கு முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply