மக்கள் முடிவுகளை விரும்புகிறார்கள் – அறிக்கையை அல்ல – பிரதமர் தெரிவிப்பு

அறிக்கைகளை விட நடைமுறை தீர்வுகளையே மக்கள் விரும்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளூராட்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூராட்சி மற்றும் தலைமைத்துவத்தின், உலகளாவிய சவால்கள் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் உடனடியாக பலனளிக்கும் முடிவுகளை விரும்புகிறார்கள், சிக்கலான திட்டங்கள் அல்ல. பங்கேற்பு ஜனநாயகத்தின் ஊடாக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவது உள்ளூராட்சி மட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் முதன்மையான பொறுப்பாகும்.

உள்ளாட்சி மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவு இன்றைய காலத்தில் இன்றியமையாதது, அதை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.உலகை வெல்வதற்கு, கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தை விரைவுபடுத்துவது அவசியம்.

தகவல் தொழில்நுட்பத்தை கிராமத்திற்கு கொண்டு செல்வதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.அரச சபையின் காலத்திலிருந்து நாட்டில் கிராமிய மட்ட நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டாலும், அது இலங்கைக்கு புதிதல்ல. அநுராதபுர காலத்திலும் கிராமிய நிர்வாகக் கட்டமைப்பு இருந்தமைக்கு வரலாறு சான்று பகர்கிறது என்றார்.

நிகழ்வில் இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தின் தலைவர் சுரதிஸ்ஸ திஸாநாயக்க, மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply