இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

இலங்கை மக்கள் பட்டினி, மோசமான வறுமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதால், அதிலிருந்து மீட்பதற்காக சர்வதேச கடன் வழங்குநர்கள், கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.

51 பில்லியனுக்கும் அதிகமான மொத்த வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் அதன் பிரதான கடன் வழங்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப உடன்படிக்கையை எட்டியுள்ளது.

கடன் வழங்குநர்கள் ‘தங்கள் மனித உரிமைகள் பொறுப்புகள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் கடப்பாடுகள், மறுசீரமைப்பு என்பனவற்றை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

அத்துடன் கடனை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளில் மாற்றம் உட்பட இலங்கைக்கான கடன் தொடர்பில் எந்தவொரு எதிர்கால அர்ப்பணிப்புகளையும் உறுதி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளதுடன், சுகாதாரப் பாதுகாப்பைப் பெறுவதற்கும் போராடி வருகின்றனர்,

ஜூன் மாத தரவுகளின் அடிப்படையில் சுமார் 11 சதவீத குடும்பங்கள் வருமானம் பெறவில்லை எனவும் 62 சதவீதமானோரது வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச உதவியை அதிகரிப்பதன் மூலமும், விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், ‘கடன் ரத்து செய்தல் உட்பட கடன் நிவாரணத்திற்கான அனைத்து விருப்பங்களையும்’ கருத்தில் கொண்டும் நெருக்கடியை திறன் மிக்கதாக கையாண்டு மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கையின் தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் மன்னிப்பு சபை கோரியது.

அதற்காக இலங்கை அதிகாரிகளும், சர்வதேச சமூகமும் விரைவான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply