மட்டுமா நகரின் வடக்கே வளங்களாலும் வள்ளல் தன்மையாலும் மானுடத்தோடு மகிழ்வுற்றிருக்கும் மங்களபதியாம் கிரான் பகுதியில் மண்ணழந்து மாலாகி விண்ணழந்து விஷ்ணுவாகி அதர்மமது வீழ தர்மமது வாழ யுகம் தோறும் அவதாரம் செய்யும் ஸ்ரீமன் நாரயணன், ஸ்ரீ தேவி,பூமிதேவி, சமேதரராக எழுந்தருளி அருளாட்சி செய்யும் திருத்தலமாம் கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை பக்தர்களின் கோவிந்தா நாமம் ஒலிக்க வரலாற்றில் முதற் தடவையாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தில் வரலாற்றில் முதற்தடவையாக தேர்த்திருவிழா பக்தி நிறைந்த விழாவாக இங்கு நடைபெற்றதனை எண்ணி பிரதேச மக்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவை நினைத்து தங்களது பக்;தியை வெளிப்படுத்தினர்.
கடந்த 30.09.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து 09 நாட்கள் திருவிழா நடைபெற்றது. புராங்கர் குடி மக்களின் 8 ஆம் திருவிழாவாகிய இத் தேரோட்டம் இடம்பெற்றது.
கிரான் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று உள் வீதி வலம் வந்து ஸ்ரீ மகா விஷ்ணு தேரில் அமர்ந்து பக்தர்களின் கோவிந்தா நாமம் ஒலிக்க வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார். சிறுவர் முதல் முதியவர்கள் என பலர் வடம் பிடித்து இழுத்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றனர்.
மகா விஷ்ணுவினை மனக்கண்ணிலே வைத்து மக்கள் வணங்குவார்கள்.நேரடியாக தரிசிக்கும் பக்தர்கள் சிந்தையிலே விஷ்ணுவை வைத்து அவரின் அலங்கார காட்சி கண்டு மெய் மறந்து வணங்குவதும் விஷ்ணுவின் மகிமையை பறைசாற்றுவதும் ஸ்ரீதேவி,பூமி தேவி சமேதரவாய் எழுந்தருளி இருக்கும் மகாவிஷ்ணுவை சர்வ அலங்காரங்களால் வகை வகையான மலர்களால் அலங்கரித்து வீதி உலா வரும் அந்த தேரோட்ட காட்சி ஒவ்வொரு விஷ்ணு பக்தர்களுக்கும் உயிரோட்டத்தை முழுமை பெறச் செய்கின்றன.
நீண்டகாலமாக இவ் வாலயத்திற்கு என தேர் ஒன்றை அமைப்பதற்கு பிரதேச மக்களும் ஆலய நிர்வாகமும் கடும் முயற்சி எடுத்ததாகவும் அதன் பலன் நிறைவேறியுள்ளதாக ஆலயத் தலைவர் ம.நந்தகுமார் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை தீமிதிப்பு,சமூத்திர தீர்த்தம் மற்றும் பொன்னூஞ்சலுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
திரு விழாக்கள் யாவும் ஆலய தலைவர், நிர்வாகமும் மஹோற்சவ பிரதம குரு ஆகம கிரியாபாவணர் வேதத் தமிழ்மறைச் சுடர் சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு அலங்கார பூசணம் சிவஸ்ரீ தாமோதர அரவிந்த சர்மா ஆகியோரால் நடாத்தப்பட்டது.
இம் முறை அதிகளவான பக்;தர்கள் என்றும் இல்லாதவாறு ஆலயத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

பிற செய்திகள்





