ராஜபக்சக்களின் கூடாரத்தை விட்டு விலகும் முக்கிய புள்ளிகள்!

கொழும்பு அரசியலில் கடந்த சில நாட்களாக அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த மே மாதம் இடம்பெற்ற அரசியற் புரட்சியினை தொடர்ந்து ராஜபக்சக்கள் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கிய நிலை காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் “ஒன்றாக எழுவோம் களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் “எனும் தொனிப்பொருளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு நீண்ட உரையொன்றினையும் ஆற்றியிருந்தார்.

குறித்த கூட்டமானது கடந்த மே9 புரட்சியின் பின்னர் மஹிந்த பங்கேற்கும் முதல் மக்கள் சந்திப்பாக அமைந்திருந்தது.

இதுஇவ்வாறு இருக்க பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இயங்கும் சுயாதீன எம்.பிக்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜீ.எல்.பீரிஸின் இல்லத்துக்குக் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சென்றிருந்தது.

அநுர பிரியதர்சன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, ஜயரத்ன ஹேரத், சந்திம வீரக்கொடி, ஜோன் செனவிரட்ன ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர்.

இவர்களுடன், டலஸ் அழகப்பெரும, சரித் ஹேரத், நாலக கொடஹேவா, டிலான் பெரேரா ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சந்திப்பின் நிறைவில், இரு தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட உடன்பட்டனர் என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இந்தவாரம் அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட மாற்றங்கள் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply