கொழும்பு,ஒக் 10
இன்று இலங்கை வந்தடைந்த ரஷ்யாவின் Aeroflot விமானம் சுற்றுலாப் பயணிகளை முழு அளவில் உள்ளடக்கி வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏரோஃப்ளோட் விமானச் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்படுவதால் நவம்பர் முதல் டிசம்பர் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்த விமானம் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் என்றும் அவர் கூறினார்.
கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் 252 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட எயார்பஸ் 330-300 SU 288 விமானம் இன்று காலை 10.06 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட், ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் இரு இடங்களுக்கு இடையே வாரத்துக்கு 2 விமானங்களை இயக்கும் என்று கூறியது.
நவம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை, விமான நிறுவனம் வாரத்துக்கு மூன்று விமானங்களை இயக்கும்.
தற்போது 75%க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிட்டட்(இலங்கை) -(AASL) மேலும் தெரிவித்துள்ளது.
இது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு நாட்டுக்கு ஒரு சிறந்த செய்தி என்பதுடன் இது நமது பொருளாதாரத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கும்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இலங்கைக்கு ரஷ்யா மிகவும் நம்பகமான மற்றும் நட்பு ரீதியிலான இடங்களில் ஒன்றாக உள்ளது. பல தசாப்தங்களாக ரஷ்யா சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான முக்கிய ஆதார சந்தையாக அதன் பெரும் திறனை வெளிப்படுத்தி வருகிறது.
ஏரோஃப்ளோட் விமான சேவைகள் இலங்கைக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதானது, இலங்கையில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து, பயணம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என AASL தெரிவித்துள்ளது.
Aeroflot ஆரம்பத்தில் 1964 இல் கொழும்புக்கான விமானங்களை ஆரம்பித்தது மட்டுமன்றி இலங்கைக்கு விமானங்களை இயக்கிய பழைமையான விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.





