டென்னிஸ்: ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் கீரன் வைரவநாதன் இரண்டாம் இடம்

கொழும்பு,ஓக் 10

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை டென்னிஸ் சம்மேளன களிமண் தரை அரங்குகளில் ஞாயிறன்று நிறைவுபெற்ற சர்வதேச டென்னிஸ் சம்மேளன (ITF) உலக டென்னிஸ் சுற்றுப் பயண 5ஆவது வார டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவில் இலங்கை வீரர் கிரான் வைரவநாதன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இரண்டாம் இடங்களைப் பெற்று அசத்தினார்.

இந்தப் போட்டியானது டென்னிஸ் வீர, வீராங்கனைகளுக்கான சர்வதேச தரப்படுத்தல் போட்டியாகும்.

அத்துடன் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இலங்கை ஜோடியினரான டினாரா டி சில்வா, சாஜிடா ராஸிக் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நிரல்படுத்தலில் முதலாம் இடத்தை வகித்த இந்தியாவின் லோரன்ட் கியோரிக்கு இறுதிப் போட்டியில் கடும் சவால் விடுத்து விளையாடிய கிரான் வைரவநாதன் 1 – 2 செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்து 2ஆம் இடத்தைப் பெற்றார்.

முதல் செட்டில் 4 – 6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கிரான், அடுத்த செட்டில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி 7 – 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.

எவ்வாறாயினும் கடைசி செட்டில் மிகத் திறமையாக விளையாடிய இந்திய வீரர் கியோரி 6 – 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

இந்திய வீரர்கள் மூவரை முறையே 1ஆம், 2ஆம் சுற்றுகளிலும் கால் இறுதியிலும்   வெற்றி கொண்ட கிரான் வைரவநாதன், அரை இறுதியில் ஜெர்மன் வீரர்  மேக்ஸ் பேட் என்பவரை 2 – 1  (6-1, 0-6, 6-2) என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டிருந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் தாய்ப்பே வீரர் சுன் டெங் என்பவருடன் ஜோடி சேர்ந்த கிரான் வைரவநாதன் அப் பிரிவிலும் 2ஆம் இடத்தைப் பெற்றார்.
இறுதிப் போட்டியில் இந்தியாவின் லோரன்ட் கியோரி, ஆரியன் ஜித் சிங் ஜோடியினரிடம் கிரான், டங் ஜோடியினர் 1 – 2 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தனர்.

பெண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் மியூ ககியாமா, ரியோ வக்கயாமா ஜோடியினரை எதிர்கொண்ட டினார டி சில்வா, சாஜிடா ராஸிக் ஜோடியினர் கடும் சவால் விடுத்து 1 – 2 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்து 2ஆம் இடத்தைப் பெற்றனர்.

முதல் செட்டில் 6 – 7 என்ற புள்ளிகள் அடிப்படையில் தொல்வி அடைந்த இலங்கை ஜோடியினர் அடுத்த செட்டை 7 – 5 என தமதாக்கி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

தீர்மானமிக்க 3ஆவது செட்டில் சமநிலை முறிப்பு முறைமையில் 10 – 5 என ஜப்பான் ஜோடியினர் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *