
இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக கருதப்படும் 8 பேர் பேசாலையில் வைத்து காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பேசாலையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஆறு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 43 வயதுக்குட்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 2 – 8வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களும் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான ஆண்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன்பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட அதேவேளை, மூன்று சிறுவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





