
இலங்கை அதிகாரிகளுக்கு கையூட்டல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியர்கள் இருவரையும் அவுஸ்திரேலிய பிராந்திய காவல் துறையினர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
அவுஸ்திரேலிய பிராந்திய காவல் துறையினர் நீண்டகாலமாக மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த இருவரும் கடந்த செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
67 மற்றும் 71 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.8 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியுடைய இரு உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொள்ள கையூட்டல் வழங்கியமை குறித்து அவுஸ்திரேலிய பிராந்திய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து 4 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை கையூட்டலாக வழங்கியமை தொடர்பில் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிராந்திய காவல் துறையினர் குறித்த விவகாரம் குறித்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவு, அவுஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணைக்குழு, இலங்கை காவல் துறை தலைமையகம், றோயல் கனேடிய காவல் துறை மற்றும் விசாரணைகளுக்கான அமெரிக்க பிராந்திய பணியகம் ஆகியவற்றுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சந்தேகநபர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவுஸ்திரேலியா சட்டவல்லுநர்களை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிற செய்திகள்





