
கொழும்பு, ஓக.11
உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்து இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மறுவகைப்படுத்துவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மறுவகைப்படுத்துவதற்கு உலக வங்கியிடம் கோரும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
நாட்டின் பொருளாதார நிலையின் பிரதிபலிப்பே இந்த தரமிறக்கப்படுவதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். 2017 இல் இலங்கை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உயர்த்தப்பட்ட போதிலும் கடந்த சில வருடங்களில் வருமான அளவுகள் குறைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அந்தஸ்து, சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து உலக வங்கியின் மலிவான கடன்களை அரசாங்கம் அணுகுவதைத் தடுத்துள்ளது. இதன்படி, கடன் பெறுவதற்காக பொருளாதார நிலையை குறைக்க சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியானது உலகின் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு கூடுதல் சலுகை நிதியை வழங்குகிறது, அதே நேரத்தில் இலங்கை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தகைய நிதியை அணுக முடியாது.
மறுவகைப்படுத்தல் சர்வதேச அமைப்புகளால் மேற்கொள்ளப்படுவதாகவும், எனவே நேற்றைய அனுமதியானது அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை மட்டுமே எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கிடையில், சமீபத்திய உலக வங்கி அறிக்கையின்படி, இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 இல் 9.2 சதவீதமாகவும், 2023 இல் மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





