
பீதுரு தாலகால மலை அடிவாரத்தில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 25 அடி உயரமான முருகன் சிலை உடனான ஆலயத்திற்கான அடிக்கல் இன்று(11) காலை நாட்டப்பட்டது.
இதற்கான அடிக்கல்லை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், லண்டன் சற்குரு சரவணபாபா சுவாமிகளின் பக்தர் நிமலன் அவருடைய தாயார் திருமதி சண்முகநாதன் , மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம், கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ, தோட்ட உதவி முகாமையளார் ஜமுதித , யட்டியாந்தோட்டை ஜெகநாதன், கோட்லோஜ் அம்மன் ஆலயத்தின் தலைவர் சிறிகாந்த் ஆகியோர் இணைந்து நாட்டி வைத்தனர்.
இங்கு அமையப்பெறவுள்ள 25 அடி முருகன் சிலையை ரட்ணபுரியை சேர்ந்த பிரபல சிற்பி சிவகுமாரன் வடிவமைக்கவுள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வை தொடர்ந்து கோட்லோஜ் அம்மன் ஆலயத்தில் சற்குரு சரவணபாபா சுவாமிகளின் ஜனன தினத்தை முன்னிட்டும் இலங்கை திருநாட்டிற்கு ஆசி வேண்டியும் விசேட யாக பூஜை ஒன்றும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சற்குரு சரவணபாபா ஜனன தினத்தன்று இந்த ஆலயத்திற்கான கும்பாபிஷேகத்தை மிகவும் விமரிசையாக நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதன்போது தெரிவித்தார்.
இந்த ஆலயமானது இலங்கையின் மிகவும் உயரமான இடத்தில் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் இது எதிர்காலத்தில் மிகவும் சிறப்புமிக்க ஒரு ஆலயமாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கோட்லோஜ் தோட்ட பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





