புத்தளத்தில் குடும்பத் தகராறு காரணமாக கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நூர் நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் 2ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
குடும்ப உறவினர்களுக்கிடையில் தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் சில நாட்களாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிவிட அது இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது, அங்கிருந்த நபர் ஒருவர், மற்றையவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் காயமடைந்த நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு , புத்தளம் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






