மற்றுமொரு சமையல் எரிவாயு வெடித்து!

எம்பிலிப்பிட்டிய வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

எம்பிலிப்பிட்டிய – கதுருகஸ்ஆர சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கடை உரிமையாளரின் வீட்டின் சமையலறையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை 29ஆம் திகதி மாலை இவ்வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

43 வயதான வீட்டு உரிமையாளர் மொஹமிதிரமிகே இந்திக, நேற்று மாலை தண்ணீர் கொதிக்க வைப்பதற்காக எரிவாயு அடுப்பை மூட்டிவிட்டு தண்ணீர் வைத்துவிட்டு வரவேற்பறையில் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் பலத்த சத்தம் கேட்டதாகவும், சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துத் தீப்பற்றி எரிவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக தீ பரவலைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் சமையல் எரிவாயு அடுப்பின் பாகங்கள் வெடித்துச் சிதறியதைப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பின் போது சம்பவ இடத்தில் எவரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சத்தம் கேட்டதால் தீயை அணைத்ததாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற் பட்டிருக்கலாம் எனவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply