யாழ். மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா நிதி உதவி கோரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும், யாழ் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நீண்ட காலமாக இந்திய மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இன்றைய சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்தியாவுக்கோ அல்லது தமிழ்நாட்டுக்கோ எதிரான பிரச்சினையாக இதனை கருதாது, பல கோடி ரூபாய் சொத்துகளை வடபகுதி மீனவர்கள் இழந்துள்ளனர்.
எமது கடற்றொழில் அமைச்சு 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நட்ட ஈடு கோரியுள்ளது.
இருந்தபோதிலும், யாழ் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனங்கள் எங்களுக்கு 400 மில்லியன் ரூபாவை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறும், அதற்குரிய திட்டம் ஒன்றைத் தயாரித்தும் கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சிடம் கையளித்திருக்கின்றோம். அதனைத் தொடர்ந்து இன்றையதினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம்.
எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அதிகரிக்க இந்த 400 மில்லியன் ரூபா உதவியை தொழிலாளர்களுக்கு மானியமாகவும், சுழற்சி முறையில் வலைகளாக வழங்குவதற்காக கோரி நிற்கின்றோம். அந்த கோரிக்கையினை தாம் பரிசீலிப்பதாக யாழ். இந்திய துணைத்தூதுவர் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் உள்ள இந்திய துணைத்தூதரகர், இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேசி இருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இந்திய துணைத்தூதுவருடன் யாழ். மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!






