
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று சிலிண்டர் ரெகுலேட்டர் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுஅதிகாலை 5 மணியளவில், சமையலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று அது வெடித்து பெரும் சுவாலையுடன் அது தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. பின்னர் அது அணைக்கப்பட்டது. எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சில நாள்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியிலும் சிலிண்டர் வெடித்திருந்தது.
இதேவேளை, நேற்றுமுன்தினம்வரை 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், கொட்டகலை – பத்தனை தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் நேற்று வெடித்து எரிந்துள்ளது. அதன் துண்டுகளையேனும் காண முடியவில்லை. அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது.
அது வீட்டுக்கு வெளியே வீசப்பட்டதால், வீட்டுக்குள் நிகழவிருந்த பெரும் இடர் தவிர்க்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி,
சிலாபம், நைனாமடம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வாயு சமநிலை தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனைத் தரப்புத் தெரிவித்தது.
குறித்த தொழிற்சாரலையில், வாயு சமநிலை நடவடிக்கைகளுக்காக பயப்படுத்தப்படும் 5 அடி உயரமுடைய நைட்ரிஜன் அடங்கிய வாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





