நல்லாட்சி அரசு ஆட்சியில் நீடித்திருந்தால் ஒட்டுமொத்த இலங்கையையே விற்பனை செய்திருக்கும் என்று துறைமுக விவகார அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் ஆளும் – எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றன.
இதன்போது, நல்லாட்சி அரசின் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனினும், நல்லாட்சி அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தினார்.
நாட்டின் பிரதான சொத்துக்களில் ஒன்றாக துறைமுகத்தை இவ்வாறு விற்பனை செய்தமை கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துறைமுகம் விற்பனை செய்யப்படவில்லை எனவும், 70 ஆண்டுகளுக்குச் சீன நிறுவனமொன்று துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும் எனவும் ரணில் குறிப்பிட்டார்.
மேலும், தேவை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் இந்த உடன்டிக்கையை இரத்துச் செய்துவிட்டு நட்டஈட்டை வழங்கி துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 33 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடப்படும் சொத்துக்கள் யதார்த்தத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவே அர்த்தப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. பதிலளித்தார்.
இந்தநிலையில், நல்லாட்சி அரசு 99 ஆண்டுகளுக்கு துறைமுகத்தை குத்தகைக்கு விட்டுள்ளது என இந்த வாதப் பிரதிவாதங்களில் பங்கேற்ற துறைமுக விவகார அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாம் நினைத்தவாறு உடனடியாகத் துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சி அரசு தொடர்ந்தும் நீடித்திருந்தால் முழு இலங்கையையும் விற்பனை செய்திருக்கும் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.






