ஊடக சுதந்திரத்தை பறிக்க இடமளியோம்!

தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களது ஊடக சுதந்திரத்தைப் பறிக்க இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. மிகவும் கீழ்தரமானதுமொன்றாகும். முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது பணியை செய்து கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் அடையாளத்தை உறுதிப்படுத்த கேட்டுக் கொண்டதையடுத்து தனது அடையாள அட்டையை அவர் காண்பிக்க முற்பட்ட வேளையே தாக்கப்பட்டதாக அறிகிறோம்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டதும் வெறுமனே ஒரு கண் துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம்.
இந்த விடயம் தொடர்பாக எமது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, இது தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைக்க வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் ஊடகத் துறைக்கு பெரும் சவாலாக அமைகின்றது. அண்மைக்காலங்களில் பல்வேறு தரப்பினருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் போலவே இந்த சம்பவமும் நடந்துள்ளது.

தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான விடயங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருந்து பாதிக்கப்படுவோருக்காக எப்போதும் குரல் கொடுப்போம். – என்றுள்ளது

Leave a Reply