இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை இன்று வியாக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று (02) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25ம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை இன்றையதினம் (02) வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட திகதியான இன்று மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அகழ்வு பனி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றதோடு, 05 அடிக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட குழிகளாக நீர் நிரம்பி காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கிடங்குகளில் இருந்த நீரை வெளியேற்ற முடியாமல் போன காரணத்தினால் நாளை மாலை மீண்டும் இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெறவுள்ளன
அகழ்வு நடவடிக்கை இடம்பெறும் இடத்தில் பொலிஸார் ,விசேட அதிரடி படையினர் ,இராணுவத்தினர் ,புலனாய்வாளர்கள் , உள்ளிட்ட தரப்பினரோடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .
குறித்த காணியில் கடந்த 8 ம் திகதி அகழ்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 14ம் திகதி குறித்த இடத்தில் இரண்டு பாரிய கிடங்குகள் தோண்டப்பட்டுள்ளன இதன் பின்னரே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசார் நீதிமன்றை நாடியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் 14 ம் திகதி குறித்த பகுதியில் அகழ்த கிடங்கிலிருந்து ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது இடம் மாறி தோண்டப்பட்டு பின்னர் மீள அகழ்வதற்கு பொலிசாரின் உதவி கோரப்பட்டுள்ளதா? அல்லது அகழ்ந்து எடுக்கப்பட்டு அதில் உள்ள கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்தவிடயம் பூதாகாரமாகியுள்ளதா? என்பது இதுவரை புரியாத புதிராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது






