வவுனியா – மன்னார் வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் வீதியை மறித்து முரண்பட்டமையால் அவ் வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்தது.
இன்று (02) வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக சென்ற கார் ஒன்று வேப்பங்குளம் பகுதியில் வீதியின் பால திருத்த வேலை இடம்பெறும் நிலையில், ஒரு பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்ட வீதி ஊடாக செல்ல முற்பட்டுள்ளது.
இதன் போது, மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்தும் அவ் ஒரு வழி பாதையின் ஊடாக செல்ல முற்பட்டது.
இதனால் இரண்டு வாகனங்களும் செல்ல முடியாத நிலையில், ஒருவரையொருவர் வாகனத்தை பின்நோக்கி செல்லுமாறு கூறினர்.
இருவரும் தத்தமது வாகனத்தை பின்நோக்கி எடுக்க மறுத்த நிலையில் இரு பகுதியினருக்கும் முரண்ப்பாடு ஏற்பட்டது.
முரண்பாட்டையடுத்து இருவரும் ஒரு வழி பாதையை வழிமறித்து தத்தமது வாகனத்தை நிறுத்தி வந்திருந்தமையால் அவ் வீதி ஊடாக போக்குவரத்துக்கள் சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்திருந்தது.
இதனையடுத்து அவ் வீதி வழியாக செல்ல முடியாமையால் மக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.
போக்குவரத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வாகனங்களை அகற்றியதுடன், போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.






