மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்து; ஒருவர் பலி

ஆனமடுவ – சிலாபம் பிரதான வீதியின் சங்கட்டிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02) விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தில் சிக்கியதுடன், விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், நிகவெரட்டிய வன்னி ரஸ்னாயக்கப்புர பகுதியைச் 21 வயது இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நேற்று இரவு 7 மணியளவில் சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் இருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்ட சில நிமிடங்களில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை எடுத்த போதிலும், அவை பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 21 வயதான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக 1990 அவசர சேவை அம்யூலன்ஸ் ஊடாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் இந்த தீ விபத்தில் காயமடைந்த இளைஞனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தின் போது ஏற்பட்ட தீயினால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

அத்துடன், உயிரிழந்த நபரின் சடலம் ஆனமடுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply