கொழும்பு,நவ 07
சர்வதேச கடலுக்கு சென்று, கடத்தல்காரர்களிடம் இருந்து சுமார் 300 கிலோ ஹெரோயின் போதைப்பொருளினைப் பெற்று நாட்டுக்குள் நுழையும் நோக்குடன் வந்துகொண்டிருந்த ‘ கவிந்து புதா’ எனும் மீன் பிடிப்படகை, கடற்படை, அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் உள்ளடங்கிய குழு ஒன்றிணைந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் தெரு பெறுமதி 600 கோடி ரூபா ஆகும்.
அதன்படி குறித்த மீன் பிடி படகில் இருந்த 6 சந்தேக நபர்கள், அப்படகுக்காக உளவு பார்த்து வந்த சிறிய ரக படகு மற்றும் அதிலிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர், கரையில் போதைப் பொருளை கையேற்க தயாராக இருந்த இருவர் என 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை, கோட்டேகொட, திக்வெல்ல மற்றும் மஹமடல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 31 வயது முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடம், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜயசூரிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் ஆலோசனையின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படைக்கு சொந்தமான விக்ரம 2 எனும் கடற்படைக் கண்கானிப்பு கப்பல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் கடற்படையினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் என ஒன்றிணைந்த நடவடிக்கைகளினை முன்னெடுக்கும் குழுவினர் இருந்துள்ளனர்.
அதன்படி, மஹா இராவணன் வெளிச்ச வீட்டிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் ( 18 கிலோ மீற்றர்) சந்தேகத்துக்கு இடமான மீன் பிடி படகு அவதானிக்கப்ப்ட்டு, அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது படகை சோதனை செய்துள்ள ஒன்றிணைந்த நடவடிக்கை குழுவினர், படகிலிருந்து 12 உரப்பைகளில் இருந்த 300 பெக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் தொகையினை கைப்பற்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
அதன் போது குறித்த மீன் பிடி படகுக்காக உளவு பார்த்து வந்த சிறிய படகினைக் கைப்பற்றியிருந்த நடவடிக்கை குழுவினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வழி நடத்தலில், நில்வெல்ல தீவுப் பகுதியை ஒட்டிய மலைப்பாங்கான பகுதியில் வைத்து போதைப் பொருளை கையேற்க வந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதியும் 6 ஆம் திகதியும் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில், இன்று திங்கட்கிழமை ( 7) சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் காலி துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது.
இந் நிலையில் சந்தேக நபர்களை, தடுப்புக் காவலில் எடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.





