தடுப்பூசி பெறாத ஒமிக்ரான் தொற்றுடைய பெண் எவ்வாறு வெளிநாடு சென்றார்? பொதுச் சுகாதார பரி.சங்கத்தினர் குற்றச்சாட்டு

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத ஒமிக்ரான் தொற்றுடைய பெண் எவ்வாறு வெளிநாடு சென்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பும் பயணிகளை வழி நடத்துவதில் பாரிய பிரச்சினை உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்று வரை எந்த தகவலும் தமக்குக் கிடைக்கவில்லை.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட குறித்த பெண்ணும் அவரது கணவரும் நவம்பர் 24ஆம் திகதி நைஜீரியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

இவர்களைத் தனிமைப்படுத்திய விடயம் உள்ளிட்டவை குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் இதுவரை தனிமைப் படுத்தலுக்கு அனுப்பப்படவில்லை .

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத குறித்த பெண் எவ்வாறு வெளிநாடு சென்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரக் கண்காணிப்புச் செயற்பாடுகள் தொடர்பாக மிகுந்த கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே நாட்டில் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதனாலேயே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply