சுழற்சி முறையில் 1 மணிநேரம் மின்வெட்டு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இரவு 6 மணி முதல் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படக்கூடும்.

நேற்றுமுன்தினம் முற்பகல் 11.30 மணியளவில் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது. எவ்வாறாயினும், சுமார் 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நேற்றுமுன்தினம் இரவு வரை நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. எனினும், நேற்றுக் காலைக்குள் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அனைத்து துணை மின்நிலையங்களும் தற்போது மின் விநியோகத்தில் இருந்தாலும், நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்னும் செயல்படாமல் உள்ளது. அதன் 3 இயந்திரங்கள் செயலிழந்தன. அதில் ஒன்றை உடனடியாக சீரமைத்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின் அமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் அமைப்புடன் சேர்க்க இன்னும் மூன்று நாள்கள் ஆகும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply