ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் தனது கவனத்துக்குக் கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“பண்டாரவளை கல்வி வலயத்தின் பூணாகலை இலக்கம் 1 தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் ஒருவர், வெளியாட்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் கண்டித்து, குறிப்பிட்ட பாடசாலை ஆசிரியர் குழாமினர், பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும் இருந்து வருகின்றன.
ஆகவே, மேற்படி சம்பவம் தொடர்பாக, ஒரு வாரத்துக்குள் முழுமையான அறிக்கையை எனது கவனத்துக்குக் கொண்டு வருமாறு, கேட்டுக்கொள்கின்றேன்” – என்று அந்தக் கடிதத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், ஊவா மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், ஊவா மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
