நாட்டின் இனப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாது: அரசுக்கு துணைபோகும் கூட்டமைப்பு எம்.பிக்கள்- கஜேந்திரன் ஆதங்கம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த அரசாங்கத்தின் முழுமையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறார்கள்.தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை துணிந்து செய்வதே அரசின் செயற்பாடாக உள்ளது.இதனை எங்கள் மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலை பொறுத்த வரையில் இப்போது தேர்தல் நடத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றது. அவ்வாறு தேர்தல் நடந்தால் அவரும்,அவரின் மொட்டுக்கட்சியும் முற்றாக சிங்கள மக்களின் ஆதரவினை மீண்டும் ஒரு முறை இழப்பதனை நிரூபிக்கும் ஒரு சம்பவம் நடந்து விடும் என்பதால் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்துவதில் முற்படுகிறார்.

இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதாக இருந்தால் 74 ஆண்டுகளாக புரையோடி இருக்கின்ற இனப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாது ,அப்படி தீர்ப்பதாக இருந்தால் ஒற்றையாட்சியை கைவிட்டு சமஷ்டி அமைப்புக்கு செல்ல வேண்டும் ,என்ற விடயங்களை சிங்கள மக்களுக்கு சொல்லி அதனடிப்படையில் ஆணையினை பெற்று தீர்வு முயற்சியில் ஈடுபடலாமே தவிர சிங்கள மக்களுக்கு பொய் சொல்லி தீர்வினை கொடுப்பது என்பது ஒரு போதும் சாத்தியமில்லாத விடயம்.

இதை தவிர அவருடன் இருக்கும் தரப்புக்கள் மிக மோசமானவர்கள்.பசில் ராஜபக்ஷ ஒற்றையாட்சி தான் தீர்வு என்று கூறுகிறார்.எனவே இப்படியான நிலையில் இவர்கள் தீர்வு தர போகிறார்கள் ,சொல்லியிருக்கிறோம் என்ன செய்கிறார்கள்  பார்ப்போம் என்று சொல்லுவது என்பது எங்களை மக்களை ஏமாற்றி அரசை பிணை எடுத்து இந்திய,மேற்கு நாடுகளுக்கு தேவைப்படுகின்ற அரசை பலப்படுத்துவதற்காக தமிழர்களின் எதிர்காலம் பலியிடப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நாட்டின் நிர்வாகத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் ,நிர்வாகங்களை மறுசீரமைக்கப் போவதாகவும்  கூறி இப்பொழுது சில  நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.அதில் சில நிறுவனங்களை தனியார் மயப்படுத்த போவதான நடவடிக்கையினை மேற்கொள்ளயிருக்கிறார்.இந்த நிறுவனங்கள் மக்களுக்கு சொந்தமானவை.இந்த சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் அதற்கு ரணிலுக்கு உரிமை இருக்கிறதா?என்ற கேள்வி இருக்கின்றது.

சிங்கள மக்கள் தாங்கள் அரியணை ஏற்றிய கோத்தபாய ராஜபக்ஷ அரசை நிராகரித்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.அதன் பின்பு பின் கதவு வழியாக வந்து ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த சொத்துக்களை விற்பதற்கான தத்துவம் இருக்கிறதா? என்று சொன்னால் அது நிச்சயமாக இல்லை.இது முறைகேடான செயற்பாடு.

ஆகவே மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த சொத்துக்களை தனியார் மயபப்டுத்துதல் அல்லது சர்வதேச தரப்புக்களுக்கு விற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதுக்கு முன்னதாக  அவர் தேர்தல் ஒன்றிலே இவ்வாறான செயற்பாடுகளை செய்ய இருப்பதாக கூறி மக்கள் ஆணையினை பெற்றதன் பிற்பாடு செய்வது பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply