வடகிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்- சுமந்திரன் எம்.பிவேண்டுகோள்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாங்கள் ஏற்கனவே சொன்ன அடிப்படையிலே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.இந்த மூன்று விடயங்களும் ஜனாதிபதி தானாகவே சொல்லி இருக்கின்ற காலக்கேடு அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பெப்ரவரி  நான்காம் திகதியில் கொண்டாடுவதற்கு முன்பதாக செய்து முடிக்க வேண்டும் என ஜனாதிபதி சொல்லி இருக்கிறதை நாங்கள் முற்று முழுதாக ஏற்று இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பெரியகல்லாறில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம் எனும் தலைப்பிலான இரத்ததானமுகாம் இன்று மட்டக்களப்பு பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டு இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததானமுகாம் ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்,பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் நே.கமல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஆகியவை இந்த இரத்ததானமுகாம்களை நடாத்தினர்.

இந்த இரத்ததானமுகாமின் ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இரத்தம் வழங்கியதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் இரத்தம் வழங்கியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

சுகாதாரம் சம்பந்தமான பலவித தேவைகள் நிவர்த்தி செய்யப்பட முடியாமலிருக்கின்றது. ஆனாலும் சுகாதாரத்துறையிலே வேலை செய்கின்றவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு வேலை செய்கின்றனர்.
பாடசாலை மட்டங்களிலே போதை பொருள் பாவனை அதிகரித்திருப்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை என்று தெரிய வந்திருக்கின்றது. ஆகவே எங்களுடைய இளைஞர் யுதிகளை இந்த போதையில் இருந்து காப்பாற்றுகின்ற பாரிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்ற ஒரு செயல்முறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிய ஒரு நாடகமொன்று பயிற்றுவிக்கப்பட்டு மாணவர்களுக்கு அது எடுத்துக் காட்டப்படுகின்றது. அதோடு சேர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன் வந்து நாங்கள் போதை பாவனையில் இருந்து விலகி இருப்போம் என்று சொல்வது மட்டுமல்ல எங்களுடைய நண்பர்களையும் அதிலிருந்து விலக்கி காப்பாற்றுவோம் என்று சத்தியபிரமாணம் செய்கின்ற ஒரு நிகழ்வாகவும் இது நடைபெறுகின்றது.இந்த வேலை திட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் செய்வதற்கு உத்தேசித்து இருக்கின்றோம்.

போதைப் பொருள் விநியோகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது இருந்தாலும் போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பவர்களுடைய புனர்வாழ்வு என்பது ஒரு மிகவும் கடினமான செயற்பாடாக இருந்தாலும் போதைப் பொருளை பாவிப்பதிலிருந்து மாணவர்களை இளைஞர்களை தடுப்பதிலே எங்களுக்கு பாரிய பங்கு இருக்கின்றது. அனைத்து தமிழ் கட்சிகள் சேர்ந்து ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெட்டத் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். வடகிழக்கில் அதி உச்ச அதிகார பகிர்வு எங்களுடைய உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இதைக் கேட்டு புரிந்து கொள்கிறவர்களுக்கு அல்லது வாசித்து புரிந்து கொள்கின்றவர்களுக்கு எங்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெட்டத் தெளிவாக தெரியும்.

தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை தட்டி எழுப்ப முடியாது. ஆகையினால் வெளிப்படையாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் பகிரங்கப்படுத்தி தான் இந்த பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கின்றோம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதைத்தான் நாங்கள் முன் வைத்திருக்கின்றோம் இதே வசனங்கள் தான் நமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது அதை நாங்கள் பகிரங்கமாக வெளிப்படையாக பல தடவைகள் பாராளுமன்றத்திலேயும் ஜனாதிபதியோடும் உரையாடுகின்ற போதும் இவற்றை நாங்கள் முன்வைத்துதான் இந்த பேச்சு வார்த்தையில் நடத்துகிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தையிலே மூன்று சமாந்தரமாக அணுகுமுறைகளை கையாளுகின்றோம். மூன்றும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பது எமது சிந்தனை.அதனை முதலாவது பேச்சு வார்த்தையில் ஜனாதிபதியும் ஏனையவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.உடனடி பிரச்சனைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள், எஞ்சி இருக்கின்ற தமிழரசியல் கைதிகளினுடைய விடுதலை அதேபோல காணி அபகரிப்பு என்கின்ற பிரதானமான விடயம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.

அவை நடைபெறுகின்ற அதே வேளையில் ஏற்கனவே அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கின்ற விடயங்கள் அமல்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், மூன்றாவதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாங்கள் ஏற்கனவே சொன்ன அடிப்படையிலே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.இந்த மூன்று விடயங்களும் ஜனாதிபதி தானாகவே சொல்லி இருக்கின்ற காலக்கேடு அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பெப்ரவரி  நான்காம் தேதிக்கு கொண்டாடுவதற்கு முன்பதாக செய்து முடிக்க வேண்டும் என ஜனாதிபதி சொல்லி இருக்கிறதை நாங்கள் முற்று முழுதாக ஏற்று இருக்கின்றோம். அந்த காலகட்டத்துக்குள்ளே இந்த மூன்று விடயங்களில் ஒரு இணக்கப்பாடு, முடிவு ஏற்பட வேண்டும் என்பதனை நாங்கள் நிர்பந்தமாக சொல்லி இருக்கின்றோம் என தெரிவித்தார்.





Leave a Reply