விழிப்புடன் செயற்படுங்கள் – வடக்கு மக்களுக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வவுனியாவில் 7 பேருக்கு டெங்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் மீண்டும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் 7 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில், வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் நகர உள்வட்ட வீதி என்பவற்றில் வசிக்கும் இருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு குறித்த பகுதியிலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, உக்குளாங்குளம் பகுதியில் இருவருக்கும், நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், மறவன்குளம் பகுதியில் ஒருவருக்கும் என மேலும் 5 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு டெங்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்புளின் பெருக்கம் அதிகரித்து டெங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் தமது வாழிடங்களையும், அயல் பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.  

Leave a Reply