ஜனாதிபதி கதிரையிலிருந்து ரணிலை விரட்டுவோம்! – ஹந்துன்நெத்தி சபதம்!

மார்ச் 10 ஆம் திகதி ஆகும்போது ரணில் விக்கிரமசிங்கவால் ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் ஊடாக அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம் என ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சியின் வெற்றியின் ஊடாக மக்கள் ஆணை புரட்சி ஒன்றை ஏற்படுத்துவோம். அந்த மக்கள் ஆணையின் ஊடாக ரணிலின் ஜனாதிபதி கதிரையைப் பறிப்போம். தேர்தல் நடத்துவதற்குப் பணம் இல்லை என்றால் அரசு ஆட்சியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

இன்று அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பொது எதிரியாக மாறி இருப்பது ஜே.வி.பி.தான். அதற்குக் காரணம் ஜே.வி.பி. வெற்றியை நோக்கி நகர்வதுதான்.நான் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக இருந்திருக்கின்றேன். அதனால் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அடிமட்டத்தில் இருந்து பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு உள்ளூராட்சி சபைதான் ஒரே வழி.

பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முதலாவது வாய்ப்புதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல். இதை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்தத் தேர்தலில் நல்லவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். இந்தத் தேர்தல் கட்சிகளின் தேவையைவிட மக்களின் தேவைக்காக வருகின்ற தேர்தல்” – என்றார்.

Leave a Reply