பல மில்லியன் ரூபாய் செலவு செய்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டுமா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் பல மில்லியன் ரூபாய் செலவு செய்து இந்த நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாட வேண்டுமா?என என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் 75 வது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த சுதந்திர தினம் கொண்டாடப்படுவது அவசியமானதா?

சுதந்திரம் இல்லாத இந்த நாட்டிற்கு சுதந்திர தினம் தேவையா? இந்த நாட்டில் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.விவசாயிகள் இன்று வீதிக்கு வரும் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் எவ்வளவு மில்லியன் ரூபாய் செலவு செய்து இந்த சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாட வேண்டுமா?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.

பல வருடங்களாக போராடி வருகிறோம்.தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் சரி இந்த நாட்டில் மக்கள் பல வித பிரச்சினைகளுக்கு இன்று வரை முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் யாருக்காக இவ்வளவு மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்து இந்த சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது” தெரிவித்தார்.

Leave a Reply