இலங்கையின் 10,000 மருத்துவ நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவு செய்யப்படாத சுமார் பத்தாயிரம் மருத்துவ நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபை தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தனியார் மருத்துவ நிறுவனங்களின் பதிவுச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையிலுள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதற்கமைய பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்களை பதிவு செய்வதற்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யாத மருத்துவ நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ​​296 தனியார் வைத்தியசாலைகள், 190 பல் சேவை மையங்கள், 627 முழு நேர பொது மருத்துவ மையங்கள், 27 முழு நேர சிறப்பு மருத்துவ சேவை மையங்கள், 1654 மருத்துவ ஆய்வகங்கள், 818 மருத்துவ மையங்கள்,432 தனியார் மருத்துவ நிறுவனங்கள், 193 கூடுதல் நேர பல் சேவை மையங்கள், 1809 கூடுதல் மருத்துவ சேவை மையங்கள், 39 கூடுதல் சிறப்பு மருத்துவம் சேவை மையங்கள் மற்றும் 31 நோயாளர்காவு வண்டி சேவைகள் மட்டுமே தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Leave a Reply