ஜனாதிபதியின் இன்றை கொள்கை பிரகடன உரையின் பின்னர் நீதிமன்றம் அதற்கு பயந்து தேர்தல் ஒத்திவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் என சிலர் நினைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தேர்தல் உரிமை என்பது அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பிலும் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை பிற்போடுவது என்பது அடிப்படை உரிமையை மீறுவதை போன்ற செயலாகும்.உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது உயர்நீதிமன்றத்தின் கைகளிலேயே உள்ளது என்று அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.தேர்தலை நடத்துவதற்கே நீதிமன்றங்கள் இருக்கின்றன. தேர்தலை ஒத்திவைப்பதற்காக அல்ல என்பது குறித்த அமைச்சர்களுக்கு தெரியவில்லை.எமது நாட்டின் நீதிமன்ற வரலாற்றை எடுத்துக்கொண்டால் தாமதமின்றி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் முன்னின்று செயற்பட்டுள்ளன.
எனவே நீதிமன்றத்தினூடாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு யாரேனும் நினைப்பார்களாயின் அது நகைச்சுவைக்குரிய விடயமாகும்.அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லையென்றாலும் நீதிமன்றத்தின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது.ஏழு மாதங்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டின் வரலாற்றில் ஏழு மாத காலத்துக்குள் பாராளுமன்ற அமர்வுகள் இரு தடவைகள் ஒத்திவைக்கப்படவில்லை. இதுவே முதல் தடவையாகும். நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர். எனினும் நாடாளுமன்றத்தை இன்று முழுமையாக பலவீனப்படுத்தியுள்ளனர்.