காணிகளை விடுவிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அவதானம்!

இந்நாட்டில் முதலீடுகளை ஆரம்பிக்கும்போது பொருத்தமான முறையில் காணிகளை விரைவில் விடுவித்துக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நாட்டில் காணி விடுவிப்பதில் உள்ள சிக்கலான முறைமையினால் அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் முதலீட்டாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, முதலீட்டுக்கான வாய்ப்புக்களை எளிதாக்காவிட்டால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மற்றும் அவற்றின் சட்ட விவகாரங்கள் தொடர்பாக பல கட்டளைச் சட்டங்களின் கீழ் பல நிறுவனங்கள் தனித்தனியாக இருப்பது குழுவில் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, காணிகளின் வகைப்படுத்தல் அதனைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின்படி அல்லாமல் முதலீட்டிற்கு ஏற்ற ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்புடைய படி வகைப்படுத்தல் செய்யப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

அத்துடன், இந்நாட்டில் காணி தொடர்பான சரியான தரவுகளைப் பூர்த்தி செய்யாத பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. எனவே, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சரியான தரவுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து, மிகக் குறுகிய காலத்தில் முதலீடுகளுக்கு ஏற்ற காணிகளை விடுவிப்பது தொடர்பில் கட்டமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று குழு கருத்துத் தெரிவித்தது.

தற்போதுள்ள சட்ட விதிகளுக்குள்ளும் முதலீட்டுக்குத் தேவையான காணிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் திறமையாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இலங்கையில் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தல் சுட்டியை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்தும் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தது.

Leave a Reply