இலங்கையில் தொடரும் மின்வெட்டு – வீடுகளில் சேதமடையும் மின் உபகரணங்கள்! குவியும் முறைப்பாடுகள்

இலங்கையில் நாளாந்தம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கும் போது பல வீடுகளில் மின் உபகரணங்கள் சேதமடைவதாக முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதும் பொறுப்பான தரப்பினர் நிவாரணம் வழங்காததால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக லக்ஷபான, ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள வீடுகளில் மின்சார உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததால், மின்சாரம் தாக்கி சேதமடைந்த மின் சாதனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் முறைப்பாடு செய்வதினை தவிர்த்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார கட்டண அதிகரிப்பினால் வழங்கப்படும் மின்சாரத்தின் தரம் சரியான முறையில் பேணப்பட வேண்டும் என்றும் விதானகே மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply