நீதிக்கான அணுகல் சேவை நம்பிக்கை தருகிறது: டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு, ஜனவரி 27:

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் நீதித் துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவை வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப் பொருளில், நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வை நீதி அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடைய சிறுவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களின் மேற்பார்வையுடனான புனர்வாழ்வு மையமொன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி அகியோரின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், நீதி அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட ரீதியான துறைசார் திணைக்களங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றுதலுடன் நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின், “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத் திட்டத்திற்கு அமைய, ‘சட்டம் மற்றும் சமூக நியாயம்’ எனும் கருத்திட்டத்தில் இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply