மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் – பெரும்பான்மையினத்தவரால் உயிர் அச்சுறுத்தல்; பதிவானது முறைப்பாடு! SamugamMedia

மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை விவகாரத்தால், பண்ணையாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மயிலத்தமடு மாதவனை பகுதியில் நடமாடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடும் வெட்டுக்காயங்களும் ஏற்பட்டு, இறந்துள்ள நிலையில்,  பண்ணையாளர்கள், தங்களுக்கும் ஏதும் உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

கடந்த காலங்களாக மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை பகுதியில், பெரும்பான்மையினத்தவர்களின் அத்துமறிய குடியேற்றம் பேசு பொருளாக இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் தலை தூக்கி உள்ளது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மையினர் அத்துமீறி குடியேற முடியாத நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கின்ற நிலையிலும் குறித்த பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் சோழன் கச்சான் பயிர்செய்கை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்ற சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றார்கள் என அப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பயிர்செய்கையில் ஈடுபடுபவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்குள் அத்து மீறி பயிர்செய்வதனால் அப்பகுதிக்குள் நுழையும் கால்நடைகள்  துப்பாக்கி சூட்டிற்கும் வெட்டுக்காயங்களுக்கும் உள்ளாகி உயிரிழந்துள்ளன.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தலைமையில் குறித்த குடியேற்றமானது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருந்த போதிலும் பண்ணையாளர்களின் முயற்சியாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பெற்றலுடனும் வழக்கு தொடரப்பட்டு சிங்கள குடியேற்றத்திற்கான தடை உத்தரவு எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மீண்டும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்து மீறிய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கடந்த காலங்களில் மாதவனை மயிலத்தமடு பகுதிக்கு சென்று அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து, பண்ணையாளர்களுக்கு சார்பாக செயற்படுகின்றார் என்ற காரணத்தினால் அரசாங்க அதிபர் பதவியில் இருந்து இடமாற்றப்பட்டார்.

இந்நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வந்திருக்கின்ற போதும், பெரும்பான்மையினத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான குழுவினர் சென்று இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை பெற்று தருவதாக கூறி இருந்தும் அவர்களாலும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற சட்டத்தை மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் பேரினவாத இனத்தவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை அத்துமறி பிடித்து அதனுள் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு கால்நடைகளின் வாழ்வாதாரத்தை இல்லாது ஒழிக்கும் ஒரு செயற்பாட்டாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தையும் மீன்பிடியையும் கால்நடையையும் நம்பி இருக்கின்ற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஒரு இன வன்முறையை தூண்டும் அளவிற்கு இந்த விவகாரம் செல்லும் என்பதில் எவ்வித அச்சமுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இந்த மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாகவும், மகாவலி பிரச்சினைக்கும் மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றே கூற முடியும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆகவே வயிற்று பிழைப்புக்காக செல்லும் பண்ணையாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதுடன் அவர்களுடைய உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை தான் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாதவனை மயிலத்தமடு மேச்சல்த்தரை விவகார கள நிலவரம் தொடர்பாக உடனுக்குடன் செய்திகளை ஊடகங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், சிறிலங்கா அரசாங்கம், பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் ஒரு முற்றுப்புள்ளி வைக்காதது பெரும் மனவேதனையாக இருக்கின்றது என்று பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply