தொலைத்தொடர்பு கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ கோரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லையென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமையினால், செயற்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், தமக்கு நிவாரணம் வழங்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலந்துரையாடல்களின் போது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹெலசிறி ரணதுங்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதனால், இறக்குமதி செலவுகள் குறைவடையும் என ஹெலசிறி ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், டொலரின் பெறுமதி வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு உடனடியாக கட்டணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் குறைவடைந்தால், தொலைத்தொடர்பு கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணிகள் கருத்திற்கொள்ளப்படவில்லை என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.