பயங்கரவாத தடைச்சத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ர்கள் கடந்த 45 ஆண்டுகளாக கோரி வருகின்ற நிலையில் பயங்கரவாத சட்டம் தொடர்பான விளக்கம் வடபகுதி தமிழ் மக்களுக்கு தேவையில்லை என வசந்த முதலிகே தலைமையிலான குழுவினருக்கு எடுத்துரைத்திருந்ததாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் எமது சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு பிரத்தியேகமாக இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கோரமுகங்களை தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கே புரியவைக்கவேண்டுமென தாம் கூறியிருந்ததாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று யாழிற்கு வருகை தந்த குழுவினர் மட்டுமே இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்ததாகவும் இதில் தமிழ் மக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்த அ.விஜயகுமார் எனவே அவர்கள் இந்த கருத்தரங்கை தெற்கிலே மேற்கொண்டிருக்க முடியும் என்றும் எதற்காக இதனை யாழில் ஏற்பாடு செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேவேளை அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தாம் கோரிக்கை ஒன்றை வைத்திரந்ததாகவும் அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளை தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஆனால் அதனை அவர்கள் முன்னெடுக்கவில்லை என்றும் அ.விஜயகுமார் மேலும் குற்றம் சுமத்தியிருந்தார்.