குடும்ப புனர்வாழ்வு நிறுவனம் ஆற்றும் சேவை இன்றைய சமூகத்திற்கு தேவை- ஸ்ரீசண்முகான் கோகுலன்!samugammedia

இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து வருவதாகவும் இதனால் குடும்பங்கள் முதற்கொண்டு மாணவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அத்தோடு சமூக பிறழ்வுகள் இடம் பெறுவதாகவும்  இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மல்லாகம் பிராந்திய நிலையப் பணிப்பாளர்  ஸ்ரீசண்முகான் கோகுலன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் குடும்பப் புனர்வாழ்வு நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி திட்டத்தின் பின்னர்  சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்  போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய சமூகத்தினரின் தேவைகளிற்காக குடும்பப் புனர்வாழ் நிறுவனம் ஆற்றிவருகின்ற சேவை காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. எமது நிலையத்திற்கு வருகை தரும்  அநேகமான சேவை நாடிகள் தமது குடும்பம் சார்ந்த வழக்குகள் சார்பாக உடனிலை ஆற்றுப்படுத்தலை செய்யவேண்டிய தேவையுடையோராகவே காணப்படுகின்றனர்.

எதிர்காலத்திலும் குடும்ப புனர்வாழ்வு நிறுவனத்துடன் சேர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும்  பொழுது சமூகம் உளநிலை ஆற்றுப்படும் என்பதே எமது நம்பிக்கையாகும். இன்றைய சூழலில் போதைப்பொருள் மற்றும்  மது பாவனையும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

இதனால் குடும்பங்களில் மோசமான குடும்ப வன்முறைகளும் பாலியல் குற்றங்கள் போன்றனவும் இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி  போதைப்பொருள் பாவனையால் பாடசாலை மாணவர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு அவர்களது கல்வி கேள்விக் குறிக்கு உள்ளாகியுள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளில் கூட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதனை அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவன் போதைக்கு அடிமையாயின் தனது உழைப்பில் 80 வீதத்தினை அதற்காக செலவிடுவார் இதனால் குடும்பத்திலுள்ள பிள்ளைகள் உரிய நேரத்தில் உணவினை பெற்றுக் கொள்ளவும் சிக்கல்கள் ஏற்பட்டு பிள்ளைகள்  சோர்வடைந்து தமது  கல்வியினை தொடரமுடியாத நிலை உருவாகும்.

ஆகவே போதைப்பொருட்களை முழுவதுமாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply