கல்முனை மாநகரசபையில் நிதி மோசடி; இருவர் கைது

கல்முனை மாநகரசபையில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவரையும்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இரு நபர்களையும்  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் சாய்ந்தமருது பகுதியில் வைத்து   கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில்  தற்காலிக சிற்றுழியர்களாக  கடமையாற்றிய இரு சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தனர்.

கைதானவர்கள் முக்கிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் குறித்த வரிமோசடியுடன் தொடர்புடைய பல நபர்கள்  கைது செய்யப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊழியர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல்  வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி  முறைகேடுகள் எவையும் மேலும்  இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில்  விசாரணைகள் பல தரப்பினரால்  மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்    பலர் கைது செய்யப்பட்டு    பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த நிதிகையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில்  கல்முனை பொலிஸ் நிலையம் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை  பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில்   குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Leave a Reply