முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு நீண்டநாள் மனநோயாளியா? அல்லது தன்னை சிங்கள மக்கள் பெருமையாக நினைப்பார்கள் என நினைத்து எல்லை மீறிய நாகரிகமற்ற வார்த்தைகளால் உளறி வருகிறாரா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கைவைப்போரின் தலையை எடுப்பேன் என அண்மையில் களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அவரது உரைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேர்வின் சில்வாவின் உரை தொடர்பில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு கூட்டத்தில் பேசும் போது பல விடையங்களை பேசினாலும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பில் அவர் பேசியது அடிப்படை மனிதவுரிமை மீறல் மாத்திரமல்ல சட்டத்தை தன்னுடைய கையில் எடுத்துள்ளார். அதாவது வடகிழக்கில் தமிழர்கள் விகாரைகளில் கை வைத்தால் அவர்களது தலையை களணிக்கு கொண்டு வருவேன் என ஊளையிட்டுள்ளார்.
இதற்கு முன்னைய காலத்தில் முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை அம்மையாரை திருமணம் செய்வதாக வாய்கிழிய கத்தினார். அதன் பின்னர் முன்னேஸ்வரம் ஆலய வேள்வியை தடுப்பதாக பிதட்டினார். இறுதியில் மன்னிப்பு கேட்டார் தற்போது தமிழரின் தலையை எடுக்கிறாராம்.
உண்மையான சட்டவாட்சி நடைபெறுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டுமாக இருந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கையை எடுத்து மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டும் இல்லாவிட்டால் மேர்வின் சில்வாவின் கருத்தை ஆட்சியாரின் மறைமுக சர்வாதிகாரமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களை இனவாதிகளையும் மனநோயாளிகளையும் வைத்து கிள்ளுக்கீரையாக பாவிக்க நினைத்தால் நாடு மீண்டும் மிகப் பெரும் அதள பாளத்தில் எதிர்காலத்தில் செல்லும் என்பதை தென்னிலங்கை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.