குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்..! சைவ பௌத்த அமைப்புக்கள் யாழில் அதிரடி..!samugammedia

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக ஒரு சிவன் கோயிலை நிர்மாணிப்பதற்கு  குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் யாழில் இன்று(17) தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருந்தூர் மலையில் நாளைய தினம் பொங்கல் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்  இந்து மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ஆரியகுளம்  நாக விகாரையில் இன்று(17) காலை நடைபெற்றது.

அதில் குருந்தூர் மலையில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும்  முகமாக குருந்தூர் மலையில் புதிதாக ஒரு சிவன் கோயிலை நிர்மானிப்பதற்கு  குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடனும் சில இந்து அமைப்புக்களின் ஒப்புதலுடனும் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருந்தூர் மலையில் நாளை நடைபெறவுள்ள பொங்கலுக்கும் இக் கலந்துரையாடலுக்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லையென கலந்துரையாடலில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

 இக் கலந்துரையாடலில்  பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி,குருந்தூர் மலை விகாராதிபதி , நாவற்குழி சம்புத்தி சுமண விகாரை விகாராதிபதி மற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஆகியோரும் இந்து  மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் உட்பட சிவசேனை அமைப்பினரும்  இந்து மதக் குருமாரும் பங்கேற்றனர்.

அதேவேளை இக் கலந்துரையாடலில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய குருக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எவரும் இக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *