நிதி அமைச்சின் கணக்கீட்டின்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 198 ரூபாவாக இருக்கும் நிலையில், நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் இதனை அறிவிப்பின் மூலம் வெளியிடுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறவுள்ள 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதிக் (கட்டளைச்) சட்டத்தின் கீழ் 2023.06.14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2336/45ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2023.06.14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இந்நாட்டில் கோதுமைமா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவற்றின் இருப்புக்களை அதிகம் பேணி அதன் ஊடாக பெருந்தொகை இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
2023.06.14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் எந்தளவு தூரத்துக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு தற்பொழுது காணப்படும் கோதுமை மா இருப்புக்கள் குறித்த சரியான தரவுகளை வழற்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கமைய இதில் ஏதாவது மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.