யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தராக மீண்டும் சிறிசற்குணராஜா..!samugammedia

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்காக தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா,உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா ஆகியோர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இம் மாதம் 12ஆம் திகதி காலை கூடியது.

அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சிறீசற்குணராஜா(76 புள்ளிகள்), பேராசிரியர் ரி. வேல்நம்பி(74 புள்ளிகள்), பேராசிரியர் கண்ணதாசன்(57 புள்ளிகள்) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப்பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில்பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு 12ஆம் திகதி மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இன்றையதினம் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *