மாகாண அதிகாரங்களைப் பரவாலாக்க நிபுணர் குழு..! சர்வதேசத்தை ஏமாற்றும் ரணில்..!கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு..!samugammedia

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்;கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.
ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.
அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.
இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுனர்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்;கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. 
மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தெடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.
1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்;வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.
அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய கலேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்;ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம். 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடு இஸ்திரமான நாடாக இருப்பதற்;குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *