ஒரு பானையில் தான் பாெங்கல் செய்ய வேண்டும் என்பது தொல்பொருள் திணைக்களத்தினர் வேண்டுமென்றே செய்யும் அடாவடி. இந்நிலமை மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற பாெங்கல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திலே பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்தமாதம் நாங்கள் இதில் பொங்கல் செய்ய முற்பட்டபோது சட்டவிரோத விகாரையின் விகாராதிபதியும் வேறு சில பௌத்த பிக்குகளும் இன்னும் சில பெரும்பான்மையினரும் வந்து அடுப்பை காலால் தட்டி வன்முறைகளை செய்து குழப்பியிருந்தார்கள்.
இந்த விடயம் நீதிமன்றுக்கு சென்று பொங்கல் விழாவினை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவின் பெயரில் இந்த பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது. ஆனாலும் நீதிமன்றம் இங்கு பொங்கல் விழாவினை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியிருந்தும் தொல்பொருள் திணைக்களத்தினர், உயர்திணைக்கள அதிகாரிகள் இணைந்து இனவாதமாக செயற்பட்டு நீதிமன்ற செயற்பாட்டுக்கு புறம்பாக ஒரு பானையில் தான் பொங்க முடியும் என கட்டுப்பாடுகளை விதித்த காரணத்தினாலே ஒரு பானையிலே பொங்கலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் பலர் பொங்கல் நிகழ்வினை செய்யமுடியாமலும் போயிருந்தது.
பலர் தனிதனி பேருந்துகளில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்கு பொங்கலை செய்து நேர்த்தி கடனை நிறைவேற்ற வந்திருந்தார்கள். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அடுப்பு வைத்து பொங்க முடியாது என தொல்பொருள் திணைக்களத்தினர் இனவதமாக நின்ற காரணத்தினால் எம்மால் அதை செய்ய முடியாமல் இருந்தது. இருந்தாலும் எம் தொடர் போராட்டத்தின் காரணமாக ஓரிடத்திலேனும் பொங்ககூடிய சூழல் எமக்கு கிடைத்திருக்கின்றது.
அந்தவகையிலே இந் நிலமையினை நாங்கள் தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எதிர்காலத்திலே நூற்றுக்கணக்கானோர் பொங்கல் வைத்து பொங்கும் நிலமை உருவாக்கப்பட வேண்டும். தொல்பொருள் திணைக்களத்தினர் எதிர்காலத்திலே இங்கு வருவதை குறைப்பதற்காகவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஏனெனில் ஆலயத்திற்கு வருபவர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன்களை செய்வார்கள் ஆனால் இங்கு ஒருபானை வைத்து ஒரு இடத்தில் தான் பாெங்கமுடியும் எனில் இங்கு வருவதன் ஆர்வம் குறைந்து தமிழ்மக்கள் இந்த ஆலயத்தை தொடர்ந்து பேணும் நிலை இல்லாமல் போகும் ஆபத்து இருக்கின்றது.
சட்டவிரோத குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரையில் ஆயிரக்கணக்கான பெரும்பான்மையினர் வந்து ஏறி தமது வழிபாடுகளை சுதந்திரமாக செய்கின்றார்கள். ஆனால் இங்கே ஓரிடத்தில் தான் பொங்கமுடியும் மேலே ஏற முடியாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இது திட்டமிட்டு தமிழ்மக்களின் வழிபாடுகளை இல்லாது செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
இங்கே நாங்கள் தாெல்பொருள் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டிற்கு அமைவாகவே பொங்கல் நிகழ்வை மேற்கொண்டுள்ளோம். ஆனாலும் ஒரு பானையில் தான் பாெங்கல் செய்ய வேண்டும் என்பது தொல்பொருள் திணைக்களத்தினர் வேண்டுமென்றே செய்யும் அடாவடி இந்நிலமை மாற்றப்பட வேண்டும் எங்களை பொறுத்தவரை அந்த விடயங்களை நீதிமன்றம் ஊடாக அணுகி உறுதிபடுத்த கூடிய முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.
இந்த ஆலயத்தின் உரித்தை ஆதிக்கத்தை பாதுகாத்து கொள்வதிலே ஒட்டுமொத்தமான மக்களும் உறுதியாக செயற்பட வேண்டும். எதிர்காலத்திலே ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இங்கு வருகைதந்து அமைதியான முறையிலே வழிபாடுகளில் ஈடுபட்டு இந்த குருந்தூர் மலையிலே ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் உரிமைகளை உறுதிப்படுத்த எல்லோரும் தங்களாலான கடமைகளை செய்ய வேண்டும் என்றார்.