வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக சீனா இறுதித் தீர்மானத்தை அறிவிக்காத நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது என்று தெரியவருகின்றது.
இலங்கையின் முன்னணிக் கடன் வழங்குநரான சீனாவுக்கு சுமார் 7.4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை செலுத்தவேண்டியுள்ளது.
இலங்கையின் ஏனைய பிரதான கடன் வழங்குநர்களான இந்தியா. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படும் நிலையில், அதில் இணைவதற்கு சீனா மறுத்து வருகின்றது.
இலங்கையின் கடன்மறுசீரமைப்புத் தொடர்பாக பரிஸ் கிளப் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் சீனா கண்காணிப்பாளராக மட்டுமே உள்ளது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏனைய கடன் வழங்குநர்களுடனான பொறிமுறை ஒன்றின் கீழ் இணக்கப்பாட்டுக்கு வருவதில் சீனா இன்னமும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
சீனாவின் இந்தப்போக்கு இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அண்மையில் சீனா சென்றபோது, கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஆனால், சீனா கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகப் பேசாது. கடன் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்களையே முன்னெடுத்து வருகின்றது.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத் தின் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கும், 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளது.
இந்தக் குழுவின் பயணத்தின்போது இடம்பெறவுள்ள முதலாவது மதிப்பாய்வுக் கூட்டத்தில் கடந்த ஜூன் மாத இறுதி வரையான விரிவாக்க நிதி வசதித் திட்டத்தின் செயற்றிறன் தொடர்பாகப் பரிசீலிக்கப்படவுள்ளது.
விரிவாக்க நிதி வசதித் திட்டத்தின் செயற்றிறன் அந்தக் குழுவாலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையாலும் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே சுமார் 350 மில்லியன் டொலர் நிதி உதவி இலங்கைக்குக் கிடைக்கும்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையால் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த 2.9 பில்லியன் டொலரின் ஒரு பகுதியாகும். ஆயினும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த உதவி கிடைக்காமல் போவதற்கான சந்தர்ப்பமே அதிகமென்பதால். இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.